Pages

Sunday, March 17, 2013

பிரணவத்தின் பொருளை

கந்தன் என் கைதி !

பிரணவத்தின் பொருளை விளக்காத அயனைச்
சிறையிலிட்ட சண்முகா !
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

அரனுக்கு ஏரகத்தில் பிரணவம் விளக்கப் பரம
குருக்கோலம் பூண்ட குகா!
தந்தையைப் பூசிக்கும் மகனாய்ச் செந்தூரிலுனைக்
கண்டதும் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

கிழவனாய் வள்ளியுடன் லீலைகள் புரிந்த
அழகனே!ஆறுமுகா!
குழந்தைக்குறும்பனாய் அவ்வைக்கு நீகாட்டும்
கோலமோ ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

கோவணாண்டியாய் ஆவினன்குடிதனில்
மேவும் பாலமுருகா!
சுரமகள் ,குறமகள் பதியாய் குன்றத்திலுந்தன்
தரிசனம் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

Mrs.Lalitha Mittal is the author of the song above.